Home மாவட்டங்கள் சென்னை தொழிலாளியை கத்தியால் குத்திய 8 பேர் கைது

தொழிலாளியை கத்தியால் குத்திய 8 பேர் கைது

சென்னை, செப். 27-
கொடுங்கையூரில் நண்பர் எங்கே என்று கேட்டு கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை கொடுங்கையூர் ரிக் ஷா காலனி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (26). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 23-ம் தேதி இரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நகர் 4-வது தெரு, அண்ணாசாலை அருகே சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், அவரது அண்ணன் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல் அருள்ராஜின் வாகனத்தை வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அருள்ராஜிடம், “உனது நண்பன் சூர்யா எங்கே?” என்று கேட்டு அந்தக் கும்பல் தகராறில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் அருள்ராஜை கைகளாலும், கத்தியாலும் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து, அந்தக் கும்பல் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அருள்ராஜ் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (26), பிரசாந்த் (26), மணிகண்டன் என்ற கஞ்சா மணி (26), முகமது ரசூல்லா (27), கணேசன் (21), தனுஷ் (18), உதயகுமார் என்ற கபாலி (30), பாலாஜி (28) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.