Home மாவட்டங்கள் சென்னை நந்தி வாகனத்தைப் பயன்படுத்தியதற்கு கண்டனம்

நந்தி வாகனத்தைப் பயன்படுத்தியதற்கு கண்டனம்

சென்னை, நவ. 5-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கோபுரத்தைச் சுத்தம் செய்யும் பணிக்காக, இறைவன் திருவீதியுலா வரப் பயன்படுத்தப்படும் நந்தி வாகனத்தை தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தியதற்கு இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக, கோபுரத்தைச் சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிக்காக தீயணைப்பு வாகனம் அல்லது ஏணி போன்றவற்றைப் பயன்படுத்தாமல், கோடிக்கணக்கான பக்தர்களின் ஆன்மிக உணர்வுடனும் வழிபாட்டு மரபுகளுடனும் தொடர்புடைய சிவபெருமானின் நந்தி வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கோபுரத்தைச் சுத்தம் செய்வது அவசியமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அரசு துறைகளின் அலட்சியத்திற்காகவும் நிர்வாக வசதிக்காகவும் பக்தர்களின் இறைநம்பிக்கையைப் பலியிடுவது நியாயமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவத்துக்காக கோவில் நிர்வாகம் பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இனி வரும் காலங்களில் கோவில் வாகனங்கள் ஆன்மிக நடைமுறைகளுக்கு முரணாகப் பயன்படுத்தப்படாது என அறநிலையத்துறை உறுதியளிக்க வேண்டும். கோவில்களின் புனிதத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராம ரவிக்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.