
சென்னை, அக். 22- “முதல்வரை விமர்சித்ததாக தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை கைது செய்த தவெக அரசு, நயினார் நாகேந்திரனை ஏன் கைது செய்யவில்லை?” என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டிருப்பது, இந்த அரசு வேண்டுமென்றே எடுத்த நடவடிக்கை. பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துகளை தவெகவினர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேயர் பிரியா குறித்தும் பலமுறை அவதூறாகப் பேசியுள்ளனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் முதல்வருக்கு மனம் கோணும் வகையில் ஏதாவது நடந்துவிட்டால் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரம், தொடர்ந்து விமர்சித்து வரும் நயினார் நாகேந்திரனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? தவெக ஆட்சியில், அக்கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் இருந்தே போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தைத் திசைதிருப்புவதற்காகவே கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. குற்றச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றைத் தடுப்பதற்கு முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
செஞ்சியில் குழந்தை காணாமல் போய் 10 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செவிலியர் கொலை வழக்கிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், எந்த ஆணும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, “உங்களுக்கு அண்ணனாக இருக்கிறேன், சீர்செய்கிறேன்” என்றெல்லாம் கூறி ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு, உங்கள் கடமையைச் செய்தாலே போதும். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.















