Home செய்திகள் உலக செய்திகள் னாவின் ரகசிய விண்கலம் குறித்து அமெரிக்க அறிக்கை

னாவின் ரகசிய விண்கலம் குறித்து அமெரிக்க அறிக்கை

பெய்ஜிங் நவ. 9-
சீனா உருவாக்கியுள்ள ‘ஷென்லாங்’ (தெய்வீக டிராகன்) என்ற ரோபோ விண்கலம், புவிக்கு அருகிலுள்ள சுற்றுப்பாதையில் மர்மப் பொருட்களை வெளியிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. அந்தப் பொருட்கள் என்ன, சீனாவின் திட்டம் என்ன என்பது தெளிவாகாததால் உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
2020-ம் ஆண்டில் முதல் பயணம் மேற்கொண்டதிலிருந்து பல நாடுகளால் கண்காணிக்கப்பட்டு வரும் இந்த விண்கலத்தின் மங்கலான பிரதிபலிப்பு படங்கள் மட்டுமே இதுவரை கிடைத்திருந்தன. தற்போது, அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு முகமை (டிஐஏ) வெளியிட்டுள்ள ‘விண்வெளியில் பாதுகாப்புக்கான சவால்கள்’ அறிக்கையில், ஷென்லாங்கின் ஓரளவு தெளிவான படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் 2024-ல் ‘யாண்டர்’ என்ற அமெரிக்க உளவு நிறுவனத்தின் விண்கலத்தால் எடுக்கப்பட்டது. அதில், விண்கலத்தின் கதவுகள் திறந்திருப்பதும், துணை செயற்கைக்கோளுடன் அது இணைக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது.
26 அடி (8 மீட்டர்) நீளமும், 32 அடி (10 மீட்டர்) அகலமும் கொண்டதாகக் கூறப்படும் ஷென்லாங், இதுவரை ஏழு பயணங்களை மேற்கொண்டு 2,000 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் ரகசியப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. ரேடார் கண்காணிப்பில், பூமியைச் சுற்றி அடையாளம் தெரியாத ஒன்பது பொருட்களை அது வெளியிட்டது பதிவாகியுள்ளது. அவை ‘கியூப்சாட்ஸ்’ எனப்படும் சிறிய செயற்கைக்கோள்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவற்றின் நோக்கம் தெளிவாகவில்லை.அமெரிக்க விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான ‘லியோ லேப்ஸ்’, ஷென்லாங் சிறிய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி வருகிறதா என சந்தேகம் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவும் மீட்டெடுக்கவும் அதில் ரோபோ கை இருக்கலாம் என அமெரிக்க அறிக்கை கூறினாலும், அது படத்தில் தெரியவில்லை.டர்காம் பல்கலைக்கழக நிபுணர் ஜொனாதன் மெக்டொவல், ஷென்லாங் பழைய அமெரிக்க விண்வெளி விமானத்தைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். சீனாவின் ‘டெங்யுவென்’ விண்வெளி விமானமும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் விண்வெளித் திறன் வேகமாக வளர்ந்து வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், விண்வெளி எதிர்ப்பு ஆயுதங்களை சீனா ஆராய்ந்து, உருவாக்கி, சோதித்து வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.