Home விளையாட்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் 3 பயிற்சியாளர்கள் விலகல்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் 3 பயிற்சியாளர்கள் விலகல்

புதுடெல்லி, அக். 8- ஐபிஎல் 2027 சீசனுக்குத் தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளர் சைராஜ் பஹுதுலேவுக்கு மாற்றாக ஒருவரைத் தேடும் நிலையில், மேலும் இரண்டு பயிற்சியாளர்களும் அணியில் இருந்து விலகியுள்ளனர். இதனால், ரிக்கி பாண்டிங் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சிக் குழுவில் குறைந்தது மூன்று புதிய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அணியின் பீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அதேபோல், அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஹோப்ஸும் அணியை விட்டு வெளியேறியுள்ளார். பிராட் ஹாடினும் ஜேம்ஸ் ஹோப்ஸும் சமீபத்தில்தான் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்திடம் தங்களது முடிவைத் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் புதிய பொறுப்புகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவருக்கும் மாற்றாகப் புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்யும் பணியை பஞ்சாப் கிங்ஸ் அணி தொடங்கியுள்ளது. அணியின் பயிற்சிக் குழுவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்குப் பிறகு, சுழற்பந்து வீச்சு, பீல்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் பொறுப்புகளுக்காக புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.