Home மாவட்டங்கள் பெங்களூர் பெட்ரோலில் 31 சதவீத எத்தனால் கலப்பு: சிவக்குமார்

பெட்ரோலில் 31 சதவீத எத்தனால் கலப்பு: சிவக்குமார்

பெங்களூரு, நவ. 9-
கர்நாடகத்தில் பெட்ரோலில் 31 சதவீதம் எத்தனால் கலந்திருப்பது சோதனையில் தெரியவந்துள்ளதாகவும், இந்தப் பிரச்சினையை தேசிய அளவில் தீவிரமாக எடுத்துச் செல்வோம் என்றும் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். பெங்களூருவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடகத்தில் பெட்ரோலில் 31 சதவீதம் எத்தனால் கலந்திருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மந்திரிக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், நிரப்பிய பெட்ரோலின் அளவுக்கு ஏற்ற பயண தூரம் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். மேலும், வாகனங்கள் அடிக்கடி பழுதாகி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மட்டுமின்றி, எத்தனால் கலக்கப்படும் பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் எவ்வாறு எத்தனால் கலக்கப்படுகிறது என்பது தொடர்பான ஆவணங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு ஒதுங்கி இருக்க முடியாது. வாகனங்களின் செயல்பாடு, பெட்ரோலின் தரம், பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவை மிகவும் முக்கியமானவை. எத்தனால் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக அதிக லாபம் சம்பாதிக்க அதை அதிக அளவில் கலப்பது சரியல்ல. இதனால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தப் பிரச்சினையை தேசிய அளவில் மிகவும் தீவிரமாக எடுத்துச் செல்வோம். இந்த மோசமான நிலையை அரசு கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா மற்றும் ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? பொதுமக்கள் சார்ந்த ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர்கள் குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.