
சென்னை, அக். 1- மகளிருக்கான விரிவுபடுத்தப்பட்ட கட்டணமில்லா பஸ் பயணத் திட்டமான ‘வெற்றி பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் நாளை (அக். 2) தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் நாளை அக்டோபர் 2 முதல்” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தத் திட்டத்தின் கீழ் மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் அரசு பேருந்துகளிலும், புறநகர் சாதாரண பேருந்துகளிலும் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யலாம். மேலும், 40 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளிலும் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 12 ஆயிரத்து 692 பேருந்துகளில் இந்த இலவசப் பயண வசதி கிடைக்கும். இதன்மூலம் தினமும் 84.32 லட்சம் பெண் பயணிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மகளிருக்கு எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி மாநிலம் முழுவதும் பெருமளவில் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.














