
சென்னை, அக். 29-
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதி, மதம், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் 40 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. நாட்டில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நடைமுறை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948-ன் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 16-வது கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அது நடத்தப்படவில்லை. இந்நிலையில், 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை மேம்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க உள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, வீடுகள் பட்டியல் கணக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடம் 33 கேள்விகள் கேட்கப்பட்டன.














