Home மாவட்டங்கள் பெங்களூர் மங்களூரு சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி

மங்களூரு சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி

மங்களூரு, அக். 1- கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மங்களூருவின் ஜோகட்டே பகுதியில் பொதுத்துறை நிறுவனமான மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (எம்.ஆர்.பி.எல்.) ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் கோக்கர் ஹைட்ரோட்ரீட்டர் (சி.எச்.டி.) பிரிவில், உயர் அழுத்தத்தில் இயங்கிக் கொண்டிருந்த கோல்ட் செப்பரேட்டர் உடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்துக்குப் பிறகு ஆலையில் இருந்து அடர்த்தியான கருப்புப் புகை எழுந்தது. பெரிய அளவில் பரவிய தீ, அருகிலுள்ள பிரிவுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்த அவசரகால மீட்புக் குழுவினரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தின் சத்தம் ஜோகட்டே, கவூர், சூரத்கல், பாஜ்பே மற்றும் மங்களூரு சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெடிப்புச் சத்தத்தால் மங்களூரு சர்வதேச விமான நிலைய நிர்வாக அலுவலகத்தின் ஜன்னல்கள் உடைந்ததாக அதிகாரிகள் கூறினர். மங்களூரு மாநகர காவல் ஆணையர் சுதீர் குமார் ரெட்டி கூறுகையில், விபத்து முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், விபத்துக்குள்ளான பிரிவின் பேட்டரி வரம்புகள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆலையின் அவசரகால மீட்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.