
அமராவதி, நவ. 8-
ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்த ஜனசேனா கட்சி வேட்பாளர் கர்பதி திவ்யா, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 350 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவரபள்ளி மண்டலம், துமந்துனிகுடம் மண்டல பரிஷத் தேர்தலில் ஜனசேனா கட்சி சார்பில் திவ்யா போட்டியிட்டார். 28 வயதான அவர், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இருப்பினும், தேர்தல் முடிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 350 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பட்டப்படிப்பு முடித்த திவ்யா, ஸ்ரீனிவாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 5 வயது மகனும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த 5ஆம் தேதி மண்டல பரிஷத் தேர்தலில் வாக்களித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு திவ்யாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, தேவரபள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அவரை ராஜமுந்திரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சீராக இருந்ததால், திவ்யா வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் திவ்யாவை ராஜமுந்திரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தேர்தலுக்கு முன்பு வேட்பாளராக தீவிரமாகப் பிரசாரம் செய்த திவ்யா, தனது வெற்றியை காண முடியாமல் உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திவ்யாவின் குடும்பத்தினருக்கு ஜனசேனா கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.













