Home விளையாட்டு மெஸ்ஸியின் அர்ஜென்டினா பிரியாவிடை ஆட்டம்

மெஸ்ஸியின் அர்ஜென்டினா பிரியாவிடை ஆட்டம்

பியூனஸ் அயர்ஸ், அக். 7-
அர்ஜென்டினா தேசிய அணிக்காக லயோனல் மெஸ்ஸி கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய ஆட்டம், கண்ணீர், வாணவேடிக்கை, கோல் என உணர்ச்சிகரமாக அமைந்தது. பியூனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மானுமென்டலில் பெனினுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மெஸ்ஸி பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்ததுடன், நிக்கோலஸ் ஓட்டமெண்டி மற்றும் நிக்கோ பாஸ் ஆகியோரின் கோல்களுக்கும் உதவினார்.
மெஸ்ஸியை வழியனுப்ப மானுமென்டல் மைதானம் முழுவதும் ரசிகர்கள் அர்ஜென்டினாவின் நீலம்-வெள்ளை நிற உடைகளுடன் திரண்டிருந்தனர். ஓய்வு அறிவித்த ஏஞ்சல் டி மரியா, விளையாடாமல் அணியுடன் இருந்தார். பிரான்ஸ் முன்னாள் வீரர் டேவிட் ட்ரெசெகே தனது மகளுடன் அரங்கில் காணப்பட்டார். ஆட்டம் தொடங்குவதற்கு முன், “Gracias” என்ற வாசகத்துடன் கூடிய பிரமாண்ட 10-ம் எண் ஜெர்சி காட்சிப்படுத்தப்பட்டது. மெஸ்ஸி தனது மகன்கள் தியாகோ, மேடியோ, சிரோவுடன் மைதானத்துக்கு வந்தபோது வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மெஸ்ஸி கண்ணீர் மல்கினார். பயிற்சியாளர் லயனல் ஸ்கலோனியும் உணர்ச்சிவசப்பட்டார். பெனின் அணித் தலைவர், மெஸ்ஸிக்கு நினைவுப் பரிசும் கடிதமும் வழங்கினார்.