Home மாவட்டங்கள் சென்னை மோடியுடன் மெட்ரோவில் பயணம்: முதல்வர் விஜய்

மோடியுடன் மெட்ரோவில் பயணம்: முதல்வர் விஜய்

சென்னை: அக். 6-
சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தை அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து, பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை பிரதமர் மோடியும், முதல்வர் விஜயும் மெட்ரோ ரயிலில் இணைந்து பயணம் செய்ய உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் இரண்டாம் கட்டமாக 118 கிலோமீட்டர் தொலைவுக்கு, 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26 கிலோமீட்டர் வழித்தடத்தில், பூந்தமல்லி–போரூர் இடையேயான 10 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதற்கான பாதுகாப்புச் சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. இதேபோல், போரூர்–வடபழனி இடையேயும் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் கடந்த ஜனவரி 11-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. எனினும், சட்டசபைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் மெட்ரோ சேவை தொடங்குவது தாமதமானது. இந்த நிலையில், அக்டோபர் 11-ம் தேதி பூந்தமல்லி–வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதன் பின்னர், பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை முதல்வர் விஜயுடன் அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய உள்ளார். முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் அவர் பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும். போரூரில் இருந்து சாலை வழியாக சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைக்கிறார். பின்னர் மாலையில் ஹெலிகாப்டர் மூலம் வேலூருக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சில திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார். அவரது தமிழக வருகையையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.