
ஒட்டாவா, செப். 23-
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பரில் கனடாவுக்கு வருகை தர உள்ளதாகவும், அவரை வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மார்க் கார்னி கூறியதாவது: இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கனடா நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியமானதாகும். பிரதமர் மோடி டிசம்பரில் கனடாவுக்கு வருகை தர உள்ளார். அவரை வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றார். இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா–கனடா இடையேயான உறவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் முதலீட்டு ஒத்துழைப்பும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தை நிறைவு செய்யக்கூடும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.











