Home மாவட்டங்கள் சென்னை ரஜினி பக்கபலத்துடன் அரசியலில் தனுஷ்

ரஜினி பக்கபலத்துடன் அரசியலில் தனுஷ்

சென்னை: அக். 7-
நடிகர் தனுஷ் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ரஜினிகாந்தின் பக்கபலத்துடன் 2031-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நடிகர் விஜய், 2 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து முதல்வராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழக அரசியலில் நீண்டகாலமாக மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக, அதிமுகவின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் வெற்றியைத் தொடர்ந்து, மற்ற நடிகர்களும் அரசியலில் களம் இறங்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
தனுஷ் தனது அரசியல் பயணத்துக்கான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களும் ரசிகர்கள் சந்திப்புகளை நடத்தியுள்ளனர். இதற்கிடையே, “தமிழக எழுச்சிக் கழகம்” என்ற பெயரில் தனுஷ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. இதுகுறித்து தனுஷ் தரப்பில், “அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், கட்சியின் பெயர் இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதுவரை ரசிகர்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
சினிமா வட்டாரத்தினர் கூறுகையில், ரஜினிகாந்த் கட்சி தொடங்கியிருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என்றும், உடல்நிலை காரணமாக அவர் அரசியலில் இருந்து பின்வாங்கியதாகவும் தெரிவித்தனர். விஜய்யின் வெற்றியைப் பார்த்த ரஜினி தரப்பினரும் ரசிகர்களும் தவறவிட்ட வாய்ப்புக்காக வருத்தத்தில் உள்ள நிலையில், அந்தக் குறையைப் போக்கும் வகையில் ரஜினியின் மருமகனான தனுஷ் அரசியலுக்கு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
உள்ளாட்சி, மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடாமல், விஜய்யைப் போலவே 2031 சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட தனுஷ் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். விஜய்யின் வெற்றிக்குப் பிறகு ரஜினி, தனுஷ் இருவரும் அவரை நேரில் சந்திக்கவில்லை. ரஜினி–விஜய் தரப்பினரிடையே சமூக வலைதளங்களில் தொடரும் விமர்சனப் போக்கும் இதற்கு காரணமாக இருக்கலாம் என சினிமா வட்டாரத்தினர் தெரிவித்தனர்.