Home மாவட்டங்கள் பெங்களூர் ரூ.18 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி 3 பேர் கைது

ரூ.18 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி 3 பேர் கைது

கொப்பால், அக்.11-
வீடு கட்டுவதற்காக வாங்கிய ரூ.18 லட்சம் கடனை அடைக்கவும், இன்சூரன்ஸ் பணத்தை பெறவும் ஆசைப்பட்டு கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கொப்பளம் மாவட்டம் காரடகி தாலுகா முன்னூர் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா (38). இவரது மனைவி உமா. இவர்களுக்குள் கடன் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கணவர் இறந்தால் கடன் தள்ளுபடியாகும், இன்சூரன்ஸ் பணமும் கிடைக்கும் என தவறாக நம்பிய உமா, தனது உறவினர் சிவாஜி மற்றும் அவரது நண்பர் கலீல் ஆகியோருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.
இதன்படி, கடந்த 6-ம் தேதி நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த ராகவேந்திராவை தாக்கியுள்ளனர். பின்னர் அவரை பைக்கில் ஏற்றிச் சென்று, சம்பவம் விபத்து போல தெரிய வேண்டும் என்பதற்காக வாயில் விஷத்தை ஊற்றி வீசிவிட்டு தப்பியோடினர்.
மறுநாள் காலை உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த ராகவேந்திராவை கண்டு மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கங்காவதி கிராமிய போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலை ரகசியம் அம்பலமானது. அதைத் தொடர்ந்து மனைவி உமா, சிவாஜி, கலீல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.