
சென்னை, செப். 18- லண்டன் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் லண்டன் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் 12-ந்தேதி நடைபெற்றது. உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கு அவர் நேரில் சென்றார். அங்குள்ள ‘ரேஸ் கண்ட்ரோல்’ மற்றும் ‘ரேஸ் சர்க்யூட்’ பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, 14-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் லண்டனில் முதலீடுகள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்கட்டமைப்பு உபகரணங்கள், உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், புதிய தொழில் முதலீட்டுக்கான கடிதமும் இடம்பெற்றன. இவற்றின் மூலம் மொத்தம் ரூ.15,300 கோடி முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.















