Home செய்திகள் உலக செய்திகள் கனடா விமான விபத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு

கனடா விமான விபத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு

ரெஜினா, செப். 22-
கனடாவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு விமானிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார், புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த ஹார்வ்ஸ் ஏர் நிறுவனம், வின்னிபெக் நகரில் இரு விமானப் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் மனோஜ் சிவகுமாரும் ஸ்ரீசரண் திருஞானசம்பந்தமும் பயிற்சி பெற்று, விமானி உரிமத்தைப் பெற்றனர். சரக்கு விமானங்களில் விமானியாகப் பணியில் சேர குறைந்தபட்சம் 200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் இருக்க வேண்டும். இதற்காக இருவரும் ஹார்வ்ஸ் ஏர் நிறுவனத்தின் செஸ்னா 172 ரகப் பயிற்சி விமானத்தை வாடகைக்கு எடுத்து இயக்கி வந்தனர். இதன்படி, கடந்த 18-ம் தேதி மனோஜும் ஸ்ரீசரணும் கனடாவின் ரெஜினா விமான நிலையத்தில் இருந்து ஸ்டீன்பாக் நகருக்குப் பயிற்சி விமானத்தில் புறப்பட்டனர். ரெஜினா நகருக்கு அருகேயுள்ள மூஸ் மவுன்ட்டன் பூங்கா வனப் பகுதியில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு கனடா போலீஸார் விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில், உடல்கள் கருகிய நிலையில் இரு விமானிகளின் சடலங்களும் மீட்கப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இரு விமானிகளின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.