Home மாவட்டங்கள் சென்னை விமானத்தில் ஆக்சிஜன் குறைவு: 100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்

விமானத்தில் ஆக்சிஜன் குறைவு: 100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்

சென்னை: அக். 12-
கோலாலம்பூர்–சென்னை–கோலாலம்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்ததை, விமானி பயணிகள் ஏறுவதற்கு முன்பே கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விமானம் தினமும் இரவு 10.50 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்து, மீண்டும் நள்ளிரவு 11.55 மணிக்கு சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்படும். நேற்று இரவு வழக்கத்தைவிட 15 நிமிடங்கள் முன்னதாக, 10.35 மணிக்கு சென்னை வந்தடைந்தது. பின்னர், மீண்டும் கோலாலம்பூருக்குப் புறப்படத் தயாரானது.
அந்த விமானத்தில் 178 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 190 பேர் பயணம் செய்ய இருந்தனர். பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பு, விமானி இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளைச் சோதனை செய்தார். அப்போது, பயணிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் டேங்கில் அளவு குறைவாக இருப்பதை அவர் கண்டுபிடித்தார். 190 பேருக்கும் போதுமான ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்ந்த விமானி, விமானத்தை இயக்க மறுத்ததுடன், சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து உயர் அதிகாரிகள், விமானி, பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன்படி, 178 பயணிகளில் 100 பேரை மட்டும் விமானத்தில் ஏற்றி இயக்கவும், மீதமுள்ள 78 பேரை சென்னையில் இருந்து மலேசியா செல்லும் வேறு விமானங்களில் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.
முன்பதிவு செய்திருந்த தகுதி அடிப்படையில் முதல் 100 பயணிகள் தேர்வு செய்யப்பட்டு விமானத்தில் ஏற்றப்பட்டனர். இதனால் மற்ற 78 பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். மாற்று விமானங்களில் அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து 100 பயணிகள், 12 ஊழியர்கள் என 112 பேருடன் அந்த விமானம் இன்று அதிகாலை 2.20 மணிக்கு, இரண்டு மணி நேரத்துக்கும் மேலான தாமதத்துக்குப் பிறகு கோலாலம்பூர் புறப்பட்டது. 78 பயணிகள் விமான நிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏர் ஏசியா மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் அனுப்பப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.