
சென்னை, அக். 13-
தவெக சார்பில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) ஆகியோர் வெற்றி பெற்றனர். அதன்பின் அவர்கள் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்றது.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக சத்யபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் கடந்த 9-ம் தேதி அறிவிக்கப்பட்டன. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் 20,040 வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமைச் செயலகத்தில் அவர்களுக்கு நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரு எம்எல்ஏ.க்களும் உறுதிமொழியை வாசித்து எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், சிடிஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன், கோ.க.ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், நெ.மரியவில்சன், ப.வெங்கடரமணன், சட்டப்பேரவை செயலர் ஆர்.சாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். பதவியேற்ற பின்னர் 2 எம்எல்ஏக்களும் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.













