Home செய்திகள் உலக செய்திகள் ஆர்டிக்கில் வெப்பம் அதிகரிப்பது ஏன்? ஆய்வு செய்ய புறப்பட்டது 12 பேர் குழு!

ஆர்டிக்கில் வெப்பம் அதிகரிப்பது ஏன்? ஆய்வு செய்ய புறப்பட்டது 12 பேர் குழு!

பாரிஸ், ஜூலை 21- ஆர்டிக் பெருங்கடலை ஆய்வு செய்ய, ‘தாரா போலார் ஸ்டேஷன்’ என்ற அதிநவீன மிதக்கும் அறிவியல் ஆய்வகம் பிரான்சில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ளது. ஆர்டிக் என்பது பூமியின் வடமுனையில் அமைந்துள்ள மிகக் குளிர்ந்த பனிப் பிரதேசமாகும். ஆண்டு முழுவதும் உறைபனியும் பனிப்பாறைகளும் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதியில், குளிர்காலத்தில் மைனஸ் டிகிரிக்கும் கீழே கடும் குளிர் நிலவும். ஆனால் தற்போது ஆர்க்டிக் காலநிலை மாற்றத்தின் பிடியில் சிக்கி, பூமிப் பந்தின் மற்ற இடங்களைவிட மூன்று முதல் நான்கு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது. இதற்கான காரணத்தை ஆராய, ஐரோப்பிய நாடான பிரான்சின் லாரியண்ட் துறைமுகத்தில் இருந்து ‘தாரா போலார் ஸ்டேஷன்’ என்ற அதிநவீன மிதக்கும் அறிவியல் ஆய்வகம் புறப்பட்டுள்ளது. இது 350 முதல் 500 நாட்கள் வரை வடதுருவப் பகுதியில் மிதந்தபடியே ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. பார்ப்பதற்கு மாபெரும் பனி வீடு போலவும், பெரிய மிதவை போலவும் காட்சியளிக்கும் இந்த மையம், முழுக்க முழுக்க அலுமினியத்தால் கட்டப்பட்டது. ஆர்டிக் கடலின் உறைபனி உருவாக்கும் கடுமையான அழுத்தம் மற்றும் மைனஸ் 52 டிகிரி செல்ஷியஸ் வரையிலான கடும் குளிரைத் தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் அடிப்பகுதியில் ஒரு சிறப்பு செங்குத்து கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு கடல் பனிக்கு அடியில் 6,000 அடி ஆழம் வரை கருவிகளை அனுப்பி 10,000-க்கும் மேற்பட்ட மாதிரிகளை ஆய்வாளர்கள் சேகரிக்கவுள்ளனர். இந்த விசித்திர ஆய்வகத்தில் 6 விஞ்ஞானிகள் உட்பட 12 பேர் தற்போது பயணிக்கின்றனர் இவர்கள் 5 மாதங்கள் சூரிய வெளிச்சமே இல்லாத கடுமையான துருவ இரவை எதிர்கொள்ளவுள்ளனர். அத்துடன், ஆர்க்டிக்கில் உலாவும் துருவக் கரடிகள் அருகில் வருவதை முகர்ந்து கண்டுபிடித்து எச்சரிக்க ‘லாப்போனியன் ஹெர்டர்’ ரக நாய் ஒன்று உடன் சென்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் நடைபெறும் இந்த ஆராய்ச்சி திட்டத்தில் ஜெர்மனி, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 40 அறிவியல் கூட்டமைப்புகளும், 30 ஆராய்ச்சி மையங்களும் கைகோர்த்துள்ளன.