
பாங்காக், ஜூலை 30- குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்ல விசா கிடைத்ததன் மூலம் 3 இந்திய இளைஞர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர். இந்த சுற்றுலாவுக்கு சுமார் ரூ.2 லட்சம் செலுத்தி உள்ளனர். கடந்த 21-ம் தேதி சுவர்ணபூமி விமான நிலையத்துக்கு வந்த அவர்களை, சுற்றுலா ஏற்பாடு செய்தவர்கள் என்று கூறி டாக்ஸி மூலம் பட்டாயாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பாங் லாமுங் மாவட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களின் கை, கால்களை கட்டிப் போட்டு சித்ரவதை செய்துள்ளனர். ரூ.70 லட்சம் கொடுத்தால் விடுதலை செய்வோம் என்றும் கூறியுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு போன் செய்து கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது.கடத்தப்பட்டவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தாய்லாந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு 3 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த அவதார் சிங், ஜக்ஜித் சிங், ரம்பாலக் குமார், சுக்பிர் சிங், குல்ரா சிங் ஆகிய 5 இந்தியர்களையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தலின் முக்கிய நபராக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தாய்லாந்து போலீஸார் தேடி வருகின்றனர்.















