
பெங்களூரு, ஆக. 6:
பெங்களூரு அருகே கனமழை காரணமாகத் தடுப்புச்சுவர் இடிந்து மண் சரிந்ததில், புதுமனை புகுவிழாக்கூட நடக்காத புதிய கட்டிடம் ஒன்று ஒருபக்கமாகச் சாய்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பன்னேருகட்டா அருகே உள்ள பில்வாரதஹள்ளி நியூ வின்னர்ஸ் காலனியில், தனியார் பள்ளி ஒன்றுக்கு அருகில் 25 அடி உயரத் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு அந்தப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, இந்தத் தடுப்புச்சுவரையொட்டி இருந்த மண் பயங்கரமாகச் சரிந்தது. இதனால் தடுப்புச்சுவரை ஒட்டி புதிதாகக் கட்டப்பட்டிருந்த ஒரு அடுக்கு வீட்டின் அடித்தள மண் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது.
இதில் நிலைகுலைந்த அந்தப் புதிய கட்டிடம், ஒருபக்கமாகச் சாய்ந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒருமுறை பலத்த மழை பெய்தால் கட்டிடம் முழுமையாகத் தரைமட்டமாகிவிடும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாய்ந்த கட்டிடத்தின் அருகில் உள்ள 2 குடும்பங்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அருகிலிருந்த தனியார் பள்ளிக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தச் சாலையில் போக்குவரத்தும் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம பஞ்சாயத்து அதிகாரி ரமேஷ் மற்றும் பொறியாளர்கள், கட்டிடத்தின் நிலையை நேரில் ஆய்வு செய்தனர். மண் மேலும் சரிவதைத் தடுக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் அதிகாரிகள் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.















