
மைசூர், ஆக. 7- ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, மைசூர் சாமுண்டி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர்.
மகாலட்சுமி அலங்காரம் கடைசி வெள்ளியை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இளம் நீல நிற பட்டுப்புடவை, தங்க நகைகள் மற்றும் பலவகை மலர்களால் கோவில் வளாகம் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. உற்சவ மூர்த்தியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த 4 வெள்ளிக்கிழமைகளாக சாமுண்டி மலையில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. கடைசி வெள்ளி என்பதால் அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனின் அருளைப் பெற்றனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு கோவில் வளாகம், படிக்கட்டுகள் மற்றும் சாலைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், முதலுதவி வசதிகள் செய்யப்பட்டிருந்தன. காவல் துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆஷாட மாத வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்குச் சிறப்பு பூஜை செய்வது மைசூரின் பாரம்பரிய வழக்கமாகும். இந்த ஆண்டின் கடைசி ஆஷாட வெள்ளியில், மகாலட்சுமி ரூபத்தில் காட்சியளித்த அம்மனைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர் ஆஷாட மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே சாமுண்டி மலைக்கு வந்து சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா இந்து நாடாக மாறக்கூடாது” என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் டாக்டர் யதீந்திர சித்தராமையா கூறியதற்குப் பதிலடி கொடுத்தார்.
இதுகுறித்து சோபா கரந்தலாஜே கூறுகையில், “யதீந்திரா போய் தன் தாயாரிடம் இது பற்றிக் கேட்கட்டும். நாம் யார், நம் பண்பாடு என்ன, நம் மதம் என்ன, நாம் எதைப் பின்பற்றுகிறோம் என்பதை யதீந்திரா தன் தாயாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும். அவரைப் பெற்றெடுத்த சித்தராமையாவின் மனைவியே மகனுக்குச் சரியான பதிலைக் கூறுவார்,” என்று காரசாரமாகத் தெரிவித்தார்.














