
வாஷிங்டன், ஆக. 8- குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெறும் நோக்கில் அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் பிரசவ சுற்றுலாவுக்கு தடை விதிக்கும் வகையில், அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்த சட்டத்தின் அடிப்படையில், அமெரிக்காவில் பிறக்கும் பெரும்பாலானோருக்கு தானாகவே குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிலர் சுற்றுலா விசாவில் அமெரிக்கா சென்று அங்கு குழந்தை பெற்றெடுக்கின்றனர். இதை பிரசவ சுற்றுலா என குறிப்பிடுகின்றனர். இதை மாற்றும் வகையில் அதிபர் டிரம்ப் முன்பு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவை ஜூன் 30ல் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, நீண்டகால நடைமுறையை மீண்டும் உறுதி செய்தது. இந்நிலையில், மீண்டும் இது தொடர்பான இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.அதன் படி குழந்தை பெற்றெடுப்பதற்காக வணிக ஏற்பாட்டு முறையில் அமெரிக்கா வருவோருக்கு நுழைவு மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு உத்தரவில், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட கூடாதவர்கள் என்ற பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதில், பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தோரின் குழந்தைகள், வெளிநாடுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் குழந்தைகள் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மிகவும் வருத்தமளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதனால், தற்போது தேவையான மாற்றங்களை செய்து வருகிறோம். நம் அரசியலமைப்பின் 14வது திருத்த சட்டம் 1868ல் உள்நாட்டுப் போருக்குப் பின் அடிமைகளின் குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது அதை சிலர் வணிக முறையில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.














