
டாக்கா: ஆக. 24:
வங்கதேசத்தில், போதைப்பொருள் பயன்படுத்தியதை தட்டிக்கேட்ட ஓய்வு பெற்ற ஹிந்து ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ரங்பூர் மாவட்டத்தில் உள்ள தாஸ்பாரா பகுதியில் வசித்து வந்தவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி, 65. அவருடன் மனைவி பிரிதிலா, 50, மகள் ஆகமி, 23, மற்றும் மகன் பிரியம் சக்ரவர்த்தி, 12, வசித்து வந்தனர்.அவர்களை தொடர்பு கொள்ள முடியாத உறவினர் ஒருவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு கணபதி குடியிருந்த வீட்டின் கதவை உடைத்து, போலீசார் சென்று சோதனையிட்டனர்.
அப்போது, அக்குடும்பத்தினர் நால்வரும் ஆளுக்கொரு புறமாய் சடலங்களாக கிடந்தனர். இதையடுத்து, அவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கணபதியின் வீட்டின் அருகில் வசிக்கும் இருவர், அவரது வீட்டின் மாடியில் போதைப் பொருளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.இதை கணபதியும், அவரது குடும்பத்தினரும் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் கணபதி குடும்பத்தினர் அனைவரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.மேலும், கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடாமல் பல மணி நேரம் அங்கே இருந்து, எவ்வித அச்சமுமின்றி சமைத்து சாப்பிட்டு, குளித்து விட்டு சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டது.இதையடுத்து, இக்கொலைக்கு காரணமான முக்தா தாஸ் மற்றும் சிப்பார்த்தா தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
உயிரிழந்த கணபதி ரங்பூர் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி கடந்த டிசம்பரில் ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்கு பின் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.













