Home மாவட்டங்கள் பெங்களூர் பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு: ஏசி மெக்கானிக் கைது

பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு: ஏசி மெக்கானிக் கைது

பெங்களூரு: ஆக. 24:
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச குற்றக் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருந்த ஏசி மெக்கானிக் ஒருவரை தொட்டபள்ளாபூர் நகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தொட்டபள்ளாபூர் இஸ்லாம்பூரைச் சேர்ந்த எஸ். சையத் அபூபக்கர் (28) என்பவரே கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார். மத்திய உளவுத்துறையினர் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி வேட்டை நடத்திய போலீசார் இவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சையத் அபூபக்கர் கடந்த 2 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டு வந்த இவர், தனது அடையாள அட்டை மற்றும் முக்கிய விவரங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இவரது செல்போனை பரிசோதித்தபோது, துப்பாக்கிகளின் (பிஸ்டல்) பல புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி மற்றும் கேரளாவில் பயிற்சி பெற்றுள்ள இந்த நபர், மசூதி ஒன்றில் போதனை செய்து வந்துள்ளார். உள்ளூர் அளவில் நெட்வொர்க் உருவாக்கி, சட்டவிரோத செயல்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இவரிடமிருந்து பல செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் சந்தேகத்திற்குரிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மூத்த போலீஸ் அதிகாரிகளும் மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளும் இவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவிலோ அல்லது நாட்டின் பிற பகுதிகளிலோ இவருக்கு உதவியவர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. கைதான அபூபக்கர் மீது பாரதிய நியாய சன்ஹிதா ( சட்டத்தின் கீழ் பயங்கரவாத செயல்களுக்கான பிரிவு 113(3) மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் பிரிவு 197(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.