
பிள்ளையார்பட்டி, செப். 6: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பத்தூர் அருகே உள்ள இந்த பிரசித்தி பெற்ற கோயிலில் 10 நாட்கள் மிக விமரிசையாக விழா நடைபெறும். இந்நிலையில், சந்திகேசுவரர் சன்னிதியிலிருந்து கொடி புறப்பாடாகி, கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து, கொடிமரம் அருகே உற்சவ விநாயகர், சந்திகேசுவரர், அங்குசத்தேவர் எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்துக்கும் மூஞ்சூறு வாகனத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா நாட்களில் தினமும் காலை வெள்ளிக் கேடகத்திலும், மாலை சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை போன்ற வாகனங்களில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். செப். 10 மாலை கஜமுக சூரசம்ஹாரம், 13ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். செப். 14 விநாயகர் சதுர்த்தி நாளில் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து, கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு மூலவருக்கு முக்குறுணி மோதகம் படையலிடப்படும். இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு ராமசாமி செட்டியார், அரிமளம் கண்ணன் செட்டியார் செய்து வருகின்றனர்.
















