Home மாவட்டங்கள் சென்னை யுபிஐ கட்டண முடிவை கைவிடுக

யுபிஐ கட்டண முடிவை கைவிடுக

சென்னை, செப். 16- ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குப் பிறகு கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கும் கூடுதலான வணிகப் பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கு, அவற்றின் மொத்த மதிப்பில் 0.40 விழுக்காடு, அதிகபட்சமாக ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, இந்தக் கட்டணம் வணிகப் பயன்பாட்டுக்கான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கும், ரூ.2,000-க்கும் குறைவான வணிகப் பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.