Home மாவட்டங்கள் சென்னை ரூ.15,300 கோடி முதலீடு: விஜய்யின் லண்டன் பயணம் மைல்கல்

ரூ.15,300 கோடி முதலீடு: விஜய்யின் லண்டன் பயணம் மைல்கல்

சென்னை, செப். 17- முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் இங்கிலாந்துப் பயணத்தின்போது ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கில், நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது. வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2020 மூலம் ரூ.67,452 கோடி முதலீடும், 1,06,998 வேலைவாய்ப்புகளும் உருவாகும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த 10.9.2026 அன்று முதல்-அமைச்சர் இங்கிலாந்து சென்றார்.
லண்டனில் 12.9.2026 அன்று இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, ஐ.எப்.எஸ்., அவரைச் சந்தித்து, இந்தியா–பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) தொடர்பாகக் கலந்துரையாடினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் 3.9.2026 அன்று விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரை அமைக்கும் திட்டத்துக்காக, சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டின் ரேஸ் கண்ட்ரோல், ரேஸ் சர்க்யூட், நவீன தொழில்நுட்பம், செயல்பாட்டு ஏற்பாடுகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேஸ் மியூசியத்தை முதல்-அமைச்சர் பார்வையிட்டார். பின்னர், சில்வர்ஸ்டோன் கிராண்ட் பிரிக்ஸ் திடலில் நடைபெற்ற 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை, நடிகரும் மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற நிலையில், கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். லண்டனில் 14.09.2026 அன்று வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்கட்டமைப்பு உபகரணங்கள், உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் மற்றும் நோக்கக் கடிதங்கள் மூலம் ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.