
இஸ்லாமாபாத்: செப்.19-
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம், கோஹட் மாவட்டத்தில் காவல் துறையினரின் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அந்தக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள மசூதியின் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மசூதிக்கு அருகில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மர்ம ஆசாமிகள் மோதவிட்டு பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை என்பதால், மசூதியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த பயங்கரத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
வெடிகுண்டு தாக்குதலின் தீவிரம் காரணமாக மசூதியின் அருகே பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல் நடைபெற்ற பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிய ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, அந்தப் பகுதியில் ராணுவத்தினரும் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
















