
பெலகாவி: செப்.19-
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா அவராதி கிராமத்தில் சொத்து தகராறு காரணமாக முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மகள் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது சொந்த சகோதரர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரர் ருத்ரப்பா சிவனப்பா குந்தரகி. இவரது மகள் சசிகலா. அவராதி கிராம பஞ்சாயத்தில் உள்ள சொத்து (எண் 135) தொடர்பான பெயர் மாற்ற விண்ணப்ப விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி காலையில் ருத்ரப்பாவும், சசிகலாவும் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த எதிர்தரப்பினர் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டு, அரிவாள் மற்றும் கற்களால் இருவரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ருத்ரப்பாவும், சசிகலாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகராறை விலக்க வந்த ராகுல் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கித்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய பஸப்பா சிவனப்பா குந்தரகி (69), சங்கப்பா சிவனப்பா குந்தரகி (55) மற்றும் மடிவாளப்பா பஸப்பா குந்தரகி (34) ஆகிய 3 பேரை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட பஸப்பாவும், சங்கப்பாவும் கொலை செய்யப்பட்ட ருத்ரப்பாவின் சொந்த சகோதரர்கள் ஆவர். மடிவாளப்பா, பஸப்பாவின் மகன் ஆவார்.
விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி கே.ராமராஜன் பாராட்டியுள்ளார். மேலும், அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.















