
பெங்களூர்: செப்.19-
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) நடத்திய கால்நடை உதவி மருத்துவர் நியமன ஊழல் வழக்கு தொடர்பான சி.ஐ.டி. விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அமலாக்கத்துறை (இ.டி.) அதிகாரிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திர குமார் மற்றும் இடைத்தரகர் பசவராஜு கன்னாளே ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து தங்களது காவலில் எடுத்துள்ளனர். இருவரிடமும் 3 நாட்கள் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களாகச் சிறையிலேயே வைத்து இருவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால், விசாரணையின் போது சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்குச் சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனால் நேற்றிரவு இருவரையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் இ.டி. சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இருவரையும் காவலில் எடுத்த அதிகாரிகள், இன்று முதல் அமலாக்கத்துறை அலுவலகத்திலேயே வைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திர குமார் மற்றும் பசவராஜு கன்னாளேவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத சொத்துக்கள் சிக்கின:
தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களிடமிருந்து லஞ்சமாகப் பெற்ற பணத்தைக் கொண்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திர குமார் தனது தோழிக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கிக் கொடுத்துள்ளதும், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே தனது சகோதரர் பெயரில் சொகுசு பங்களா (வில்லா) ஒன்றை வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சாந்தாவிடமும் சி.ஐ.டி. தீவிர விசாரணை:
இதே வழக்கு தொடர்பாக சி.ஐ.டி. அதிகாரிகள் சாந்தா ஒசமனி என்பவரிடமும் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் தாவணகெரேயில் உள்ள அவரது வீடுகளில் சி.ஐ.டி. படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சாந்தா ஒசமனி பெங்களூரில் வசித்து வந்த நிலையில், தாவணகெரேயில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது தாவணகெரே வீட்டை வாடகைதாரர்கள் காலி செய்துவிட்டதால், அங்கும் சி.ஐ.டி. குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
பெங்களூரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 2 செல்போன்கள் மற்றும் ஒரு டேப்லெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள டிஜிட்டல் தரவுகளை (Digital Data) மீட்டெடுப்பதற்காக அவை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சாந்தா ஒசமனிக்குத் தொடர்புடைய பிற இடங்களிலும் சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சி.ஐ.டி. விசாரணைக்கு ஆஜரான போது, அதிகாரிகளின் கேள்விகளுக்கு சாந்தா ஒசமனி சரியான பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள 2 செல்போன்கள் மற்றும் டேப்லெட்டில் இருந்து கிடைக்கப்றும் தரவு மீட்பு அறிக்கையை விசாரணை அதிகாரிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்த கே.பி.எஸ்.சி. பணிநியமன ஊழல் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.ஐ.டி. ஆகிய இரு அமைப்புகளும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.















