
பெங்களூரு, செப். 19- ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மார்க்-1ஏ இலகு ரக போர் விமானங்களை, இந்தாண்டு இறுதிக்குள் விமானப்படைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விமானப்படையில் இலகு ரக போர் விமானங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், மார்க்-1ஏ விமானங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. விமானப்படை சார்பில் 180 விமானங்களை வாங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.1.10 லட்சம் கோடியாகும்.
இதில், 83 விமானங்களுக்கான முதல் ஒப்பந்தம் 2021 பிப்ரவரியிலும், 97 விமானங்களுக்கான இரண்டாவது ஒப்பந்தம் 2025 செப்டம்பரிலும் மேற்கொள்ளப்பட்டது. இந்தாண்டு இறுதிக்குள் 10 விமானங்களை விமானப்படைக்கு வழங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது.கடந்த 2021ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் முதல் விமானங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அமெரிக்காவின் ஜி.இ. நிறுவனத்திடம் இருந்து இன்ஜின்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமும், முக்கிய சான்றிதழ்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களும் இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளன.
















