Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.2,684 கோடி மோசடி: அனில் அம்பானி மீது வழக்கு

ரூ.2,684 கோடி மோசடி: அனில் அம்பானி மீது வழக்கு

புதுடில்லி, செப். 20-
‘ரிலையன்ஸ் கேப்பிடல்’ நிறுவனம் போலியான தகவல்களை அளித்து, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்திடம் (எல்.ஐ.சி.) இருந்து ரூ.2,684 கோடி முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘ரிலையன்ஸ் கேப்பிடல்’ நிறுவனம் 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை ஐந்து கடன் பத்திரங்களை வெளியிட்டது. அந்தப் பத்திரங்களில் எல்.ஐ.சி. ரூ.3,900 கோடி முதலீடு செய்தது.
நிறுவனத்தின் பொது மற்றும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், ஏற்கெனவே உள்ள கடனைக் குறைப்பதற்கும் இந்த முதலீடுகள் திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், தவறான தகவல்களை அளித்து முதலீடு செய்யத் தூண்டியதாகவும், பின்னர் அந்த நிதி முறைகேடாக வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டதாகவும் எல்.ஐ.சி. புகார் அளித்துள்ளது. இதனால் எல்.ஐ.சி.க்கு ரூ.2,684.57 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அதே அளவுக்கு சட்டவிரோத ஆதாயம் கிடைத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.இதற்கு முன், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் எல்.ஐ.சி. அளித்த புகார்களின் அடிப்படையில், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’, ‘ரிலையன்ஸ் கேப்பிடல்’ உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. எட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அவற்றில் ஆறு வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன; ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் உள்ளதுடன், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பிலும் உள்ளன.