
மும்பை, செப். 20-
இந்தியாவின் மென்பொருள் சேவை ஏற்றுமதி கடந்த 2025–26-ம் நிதியாண்டில் 8.2 சதவீதம் அதிகரித்து, ரூ.21.03 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மென்பொருள் சேவைகளின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தொடர்ந்து முக்கிய வாடிக்கையாளர் நாடாகவும், முதன்மை சந்தையாகவும் திகழ்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த மென்பொருள் சேவை ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு 54.1 சதவீதமாக உள்ளது. இதன் மதிப்பு ரூ.11.37 லட்சம் கோடியாகும். ஐரோப்பிய நாடுகள் 31.8 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. இதில், பிரிட்டன் மட்டும் 15.4 சதவீத பங்கை பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த மென்பொருள் சேவை ஏற்றுமதியில் கணினி சேவைகளின் பங்களிப்பு மட்டும் 69.3 சதவீதமாக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த ஏற்றுமதி ரூ.13.96 லட்சம் கோடியாகவும், தகவல் தொழில்நுட்பத்தைச் சார்ந்த பிற துறைகளின் ஏற்றுமதி ரூ.6.46 லட்சம் கோடியாகவும் உள்ளது. பி.பி.ஓ. சேவைகள் ஏற்றுமதி ரூ.5.32 லட்சம் கோடியாகவும், பொறியியல் சேவைகள் ஏற்றுமதி ரூ.1.14 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளன.














