
டில்லி, செப். 22- டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா, 57, வீட்டில் தீ விபத்தின்போது கண்டெடுக்கப்பட்ட கணக்கில் வராத பணம் தொடர்பாக முதல் தகவலறிக்கை பதிவு செய்து, சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்தார். டில்லியில் உள்ள அவரது வீட்டில் 2025 மார்ச் 14-ல் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, வீட்டின் ஓர் அறையில் இருந்து எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றமும், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணை நடத்தின. அந்த விசாரணைகளில் யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு எதிரான பதவிநீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், நீதிபதி பதவியை யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவரது வீட்டில் தீ விபத்தின்போது கண்டெடுக்கப்பட்ட கணக்கில் வராத பணம் தொடர்பாக முதல் தகவலறிக்கை பதிவு செய்து, சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கன்ஷியாம் உபாத்யாயா டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி அமித் பன்சால் நேற்று விசாரித்தார். அப்போது அவர், “இந்த மனுவை நான் விசாரிக்கப் போவதில்லை. இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை. மனுதாரருக்கு இதை விட வேறு வேலை இல்லையா? முதல் தகவலறிக்கை பதிவு செய்யக் கோரி, அவர் ஏன் விசாரணை நீதிமன்றத்தை அணுகவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.















