Home செய்திகள் உலக செய்திகள் இந்தியாவுக்கு தொடர்பில்லை: டிடிபி விளக்கம்

இந்தியாவுக்கு தொடர்பில்லை: டிடிபி விளக்கம்

இஸ்லாமாபாத், செப். 22-
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது தாங்கள் நடத்தும் தாக்குதல்களுக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பு தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய தீவிரவாதம் தொடர்பாக பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், டிடிபி அமைப்பின் முக்கிய தலைவரான முஃப்தி கஃப்ரான் இதுகுறித்து கூறியதாவது:
“ஆப்கானிஸ்தானில் இருந்து டிடிபி அமைப்பினர் எல்லை தாண்டி வந்து பாகிஸ்தான் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் நிராகரிக்கத்தக்கது. இதுதொடர்பான உறுதியான ஆதாரங்களை பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இதுவரை வெளியிடவில்லை. எங்கள் அமைப்பின் ராணுவ மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள் அனைத்தும் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளன. அங்கிருந்துதான் நாங்கள் இயங்கி வருகிறோம். பாகிஸ்தானில் குறைந்தபட்சம் 39 மாவட்டங்களில் எங்கள் அமைப்புக்குக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அவற்றில் மிகக் குறைந்த அளவிலான அமைப்புகளே ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ளன.பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா உள்ளிட்ட பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் டிடிபி இயங்கி வருகிறது. இந்தப் பகுதிகள் எல்லையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. சமீபத்தில் ஹாங்கு பகுதியில் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதி ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் இல்லை. பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதியில் முள்வேலித் தடுப்புகள், கண்காணிப்புச் சாவடிகள், எச்சரிக்கை அமைப்புகள், விளக்குகள் மற்றும் நிலக்கண்ணி வெடிகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இந்நிலையில், எங்களால் எவ்வாறு தொடர்ந்து எல்லையைக் கடந்து வர முடியும்? இந்திய அரசு டிடிபி அமைப்புக்கு ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் கூறிவரும் குற்றச்சாட்டும் முற்றிலும் புறந்தள்ளத்தக்கது. அது, எதிரிகளுக்கு எதிராக பாகிஸ்தான் காலங்காலமாகப் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். எங்கள் அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் சுயசார்பான நிதியுதவி மற்றும் திட்டமிடலின் மூலமே நடைபெறுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.