
சென்னை, செப். 27-
ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை–மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (01015), அக். 14, 21, 28 மற்றும் நவ. 4, 11, 18 ஆகிய தேதிகளில் புறப்படும். இந்த ரயில் அதிகாலை 12.35 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்பட்டு,
அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி.க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (01016), அக். 15, 22, 29 மற்றும் நவ. 5, 12, 19 ஆகிய தேதிகளில் புறப்படும். இந்த ரயில் அதிகாலை 4 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி.யை அடையும். இதனிடையே, மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸில் இருந்து திருவனந்தபுரத்துக்கும் சிறப்பு ரயில் (01463) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அக். 15, 22, 29 மற்றும் நவ. 5, 12, 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
அதேபோல், திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸுக்கு சிறப்பு ரயில் (01464) இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் அக். 17, 24, 31 மற்றும் நவ. 7, 14, 21 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை (செப். 28) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















