
புதுடெல்லி, அக். 4- மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களின் தீர்ப்பையும் ஜனநாயகத்தையும் அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.வில் கலந்துள்ளது என அவர் விமர்சித்தார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: தேர்தலில் தோல்வியடையும் போது மக்களின் தீர்ப்பையும் தேர்தல் ஆணையத்தையும் அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கமாக உள்ளது. இந்திய ஜனநாயகம் மிகவும் வலுவானது; உலக அளவில் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ஆனால், தோல்வியின்போது தேர்தல் ஆணையத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் காங்கிரஸ் செயல்படுகிறது. ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் கார்கே தெரிவித்துள்ள கருத்துகள் அரசியலமைப்பை வலுவிழக்கச் செய்யும் வகையிலும், ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி நாட்டில் குழப்பத்தை உருவாக்கும் வகையிலும் உள்ளன. காங்கிரஸ் வெற்றி பெறும்போது தேர்தல் ஆணையம் சரி என்றும், தோல்வியடையும் போது அதே ஆணையத்தை குறை கூறுவதும் அதன் வழக்கம். அப்படியானால் கர்நாடகம், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசத்தில் அக்கட்சி எவ்வாறு வெற்றி பெற்றது என்று அவர் கேள்வி எழுப்பினார். வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை, 1980 மற்றும் 1990-களில் வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்ட காலத்துக்கு நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்லும் முயற்சி என்றும் அவர் கூறினார்.













