Home மாவட்டங்கள் சென்னை ஜெம் வீரமணி வழக்கில் திமுகவுக்கு அவதூறு வழக்கு அனுமதி

ஜெம் வீரமணி வழக்கில் திமுகவுக்கு அவதூறு வழக்கு அனுமதி

சென்னை, அக். 6-
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்கில், முந்தைய திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரைத் தப்பிக்கவிட்டதாகப் பேசிய தமிழக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தவெக ஐ.டி. பிரிவும் திமுகவை குற்றம்சாட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இதனால் திமுகவுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அவதூறான கருத்துகளை வெளியிடத் தடை விதிக்கவும், ரூ.1 கோடியே 1 லட்சம் மானநஷ்டஈடு வழங்க உத்தரவிடவும் கோரி, திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஜெம் வீரமணிக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி புகார் பெறப்பட்டதாகவும், மறுநாளே எந்தத் தாமதமுமின்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றும், உண்மைக்கு மாறாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள அவதூறு கருத்துகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கே.ஜி. திலகவதி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அமைச்சர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முன்கூட்டியே சட்டரீதியான நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பதால், வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், வழக்கு அமைச்சர்கள் என்ற முறையில் அல்லாமல், தனிநபர்கள் என்ற முறையிலேயே தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.