Home மாவட்டங்கள் சென்னை யுபிஐ கட்டணத்துக்கு எதிர்ப்பு: வணிகர்கள் போராட்டம்

யுபிஐ கட்டணத்துக்கு எதிர்ப்பு: வணிகர்கள் போராட்டம்

சென்னை, அக். 9- யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பேரமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
யுபிஐ தற்போது டிஜிட்டல் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. நாட்டின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85 சதவீதம் யுபிஐ மூலம் நடைபெறுகிறது.
இதன் மூலம் காகிதப் பரிவர்த்தனையைக் குறைக்கும் நோக்கம் இலக்கை நெருங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் யுபிஐ பயன்பாடு விரிவடைந்துள்ளது. கட்டணம் எதுவும் இல்லாததால் வணிக நிறுவனங்களும் அதைப் பயன்படுத்தத் தொடங்கின. சிறு, குறு வணிகர்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை யுபிஐ பரிவர்த்தனையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஜிஎஸ்டி, உள்ளூர் வரிகள், வாடகை, மின் கட்டணம், ஊழியர்களின் சம்பளம், பெட்ரோல், டீசல் செலவு மற்றும் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளில் வணிகர்கள் சிக்கியுள்ள நிலையில், யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணம் கூடுதல் சுமையாக அமையும்.எனவே, யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும் வங்கிகளில் அனைத்து வணிகர்களும் கணக்கு தொடங்குவோம் என்று அவர் தெரிவித்தார்.