Home செய்திகள் தேசிய செய்திகள் ஈக்கள் பெயரில் ‘மக்கி ஜனதா கட்சி’ வைரல்

ஈக்கள் பெயரில் ‘மக்கி ஜனதா கட்சி’ வைரல்

புதுடெல்லி, அக். 13-
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இணையத்தில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து, ‘மக்கி ஜனதா கட்சி’ (எம்ஜேபி) என்ற பெயரில் உருவான புதிய நையாண்டி இயக்கம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதன் பெயர், ஈ ஈமோஜி மற்றும் பதிவுகள் ஆகியவை, ஏற்கெனவே வைரலான சிஜேபியை நினைவூட்டுகின்றன.எம்ஜேபியின் இன்ஸ்டாகிராம் கணக்கு (@makkhijanta party), தன்னை ‘இளைஞர்களின், இளைஞர்களால், இளைஞர்களுக்காக’ உருவான அரசியல் முன்னணி என அறிமுகப்படுத்துகிறது. இந்த அமைப்பு எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானதல்ல என்றும், எந்தக் கட்சியுடனும் இணைந்ததல்ல என்றும் தனது பதிவுகளில் தெரிவிக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது. இதற்காக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் பல மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இதனால் பொதுமக்களின் பயணத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். அக்டோபர் 9-ஆம் தேதி, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, பாதுகாப்பு நடவடிக்கைகள் அளவுக்கு மீறியதாக இருக்கக் கூடாது என்று கூறியது. “ஈயைக் கொல்ல சுத்தியலைப் பயன்படுத்த வேண்டாம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே ‘மக்கி ஜனதா கட்சி’ என்ற பெயரும், அதன் நையாண்டிப் பதிவுகளும் உருவாகியுள்ளன. எம்ஜேபி தனது பதிவுகளில், “ஒரு நாள் கரப்பான் பூச்சி, மறுநாள் ஈ… ஜனநாயகத்தில் மக்களை இப்படியா அழைப்பது?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. எம்ஜேபியின் இணையதளம் முதலாளித்துவம், தொழில் முனைவு, வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் வளர்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.