
திருவனந்தபுரம், அக். 13-
கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ‘சி.எம்.ஆர்.எல்.-எக்ஸாலாஜிக்’ நிறுவனங்கள் தொடர்புடைய லஞ்ச வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். கேரளாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2016 முதல் 2026 வரை பினராயி விஜயன் முதல்வராகப் பதவி வகித்தார். 2017-ம் ஆண்டு, அவரது மகள் வீணாவுக்குச் சொந்தமான, தற்போது செயல்பாட்டில் இல்லாத ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு, எந்தவொரு தகவல் தொழில்நுட்ப சேவையும் பெறாமல், ரூ.2.78 கோடியை ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூட்டைல் லிமிடெட்’ (சி.எம்.ஆர்.எல்.) நிறுவனம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பினராயி விஜயன், வீணா, அவரது கணவரும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, கடந்த மாதம் அமலாக்கத் துறை கேரள போலீசாருக்கு கடிதம் எழுதியது. ஆனால், காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை அறிக்கையின் அடிப்படையில், பினராயி விஜயன், வீணா உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.













