Home செய்திகள் தேசிய செய்திகள் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் ஐஎன்எஸ் மாங்ரோல்

நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் ஐஎன்எஸ் மாங்ரோல்

மும்பை, அக். 13- நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் திறன் கொண்ட ஐஎன்எஸ் மாங்ரோல் போர்க்கப்பல், நேற்று மும்பையில் இந்தியக் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட்டது. கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அவற்றை அழிக்கும் திறன் கொண்டது. கடல் சார்ந்த ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற போர்க்கப்பல்களுடன் இணைந்து செயல்படும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல் கண்காணிப்பு, குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் கண்ணிவெடி எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஐஎன்எஸ் மாங்ரோல் ஈடுபட முடியும். துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதுடன், இந்தியக் கடற்படையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் இந்தக் கப்பல் உறுதுணையாக இருக்கும். குஜராத் மாநிலம் ஜூனாகட் மாவட்டத்தில் உள்ள கடலோர மீன்பிடி நகரமான மாங்ரோலை மையமாகக் கொண்டு இக்கப்பலுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ஏப்ரல் 2004 வரை இந்தியக் கடற்படையில் சேவையாற்றிய ஐஎன்எஸ் மாங்ரோல் என்ற கண்ணிவெடி அகற்றும் ‘மைன்ஸ்வீப்பர்’ வகைப் போர்க்கப்பலின் பாரம்பரியத்தை இந்தப் புதிய கப்பல் தொடர்ந்து முன்னெடுக்கிறது. பழைய போர்க்கப்பல்களின் பெயர்களையும் அவற்றின் பெருமையையும் அடுத்த தலைமுறை கப்பல்களுக்குச் சூட்டும் கடற்படையின் பாரம்பரியத்தின் அடிப்படையில் இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் மாங்ரோல் கப்பல் 80 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. நவீன போர்க்கப்பல் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சென்சார்களை ஒருங்கிணைத்தல் ஆகிய துறைகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் சுயசார்புத் திறனை இந்தக் கப்பல் வெளிப்படுத்துகிறது.