Home செய்திகள் உலக செய்திகள் இந்தியர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்: பியூஷ் கோயல்

இந்தியர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்: பியூஷ் கோயல்

பெர்லின், அக். 27-
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜெர்மனிக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பெர்லினில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் விலைவாசி உயர்வு மற்றும் ஊதிய உயர்வைக் கோரி நடைபெறும் போராட்டங்கள் வன்முறையாகவும், பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படும் நிகழ்வுகளாகவும் மாறி வருகின்றன. ஆனால், இந்திய சமூகத்தினர் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள்.இந்தியர்கள் தங்களது குடும்பங்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்பது உலக நாடுகளுக்குத் தெரியும். இந்தியர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையிலோ அல்லது சமூகத்துக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களிலோ ஈடுபடமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் அவர்கள் எந்த நாட்டிலும் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.ஜெர்மனிக்கு புதிதாக உயர்கல்வி பயில வரும் இந்திய மாணவர்களுக்கு, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பப் பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு, அந்நாட்டில் நீண்டகாலமாக வசித்து வரும் இந்தியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.