
ரியாத், அக். 28- தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வகையில், ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கு ஈரான் வாயிலாக ரூ.9,500 கோடி வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்காசிய நாடான ஏமனில், அந்நாட்டு அரசுக்கும் ஹவுதி அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா ஆதரவளித்து வருகிறது. ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. ஏமனின் முக்கியப் பகுதிகளை ஹவுதி அமைப்பு சமீபத்தில் கைப்பற்றியது. இதையடுத்து, அந்த அமைப்புக்கு எதிராக ஏமன் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு சவுதி அரேபியாவும் உதவியது. இதன் தொடர்ச்சியாக, சவுதி அரேபியா மீது ஹவுதி அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் ஆலைகளை குறிவைத்து ஹவுதி அமைப்பு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களை நிறுத்துவதற்காக, ஈரான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஹவுதி அமைப்புக்கு பணம் வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, தலைநகர் ரியாத்தில் உள்ள சவுதி அரேபிய ராணுவ அமைச்சகக் கட்டடத்தின் மீது நேற்று இரவு ஏவுகணை மூலம் நேரடித் தாக்குதல் நடத்தியதாக ஹவுதி பயங்கரவாத அமைப்பு தெரிவித்தது. அந்த ஏவுகணை எந்தவிதத் தடையும் இன்றி, இலக்கை மிகத் துல்லியமாக நேரடியாகத் தாக்கியதாகவும் ஹவுதி அமைப்பு கூறியுள்ளது.
















