
செர்பியா, அக். 29-
செர்பியாவின் நோவி சாட் ரயில் நிலைய மேற்கூரை 2024 நவம்பரில் இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் விபத்து மட்டுமல்ல; கடந்த 14 ஆண்டுகளாக நிலவியதாகக் கூறப்படும் சர்வாதிகாரம், லஞ்சம், கட்டமைக்கப்பட்ட ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான மக்களின் கோபமாக மாறியது. அதிபர் அலெக்சாண்டர் வுசிச்சின் ஆட்சிக்கு எதிரான வரலாற்றுப் போராட்டத்துக்கு இது தொடக்கமாக அமைந்தது. ரயில் நிலையக் கட்டுமானத்தில் ஏற்பட்ட ஊழலும் அரசின் கவனக்குறைவுமே விபத்துக்குக் காரணம் என மக்கள் குற்றம்சாட்டினர். பல்கலைக்கழக மாணவர்கள் ஊழல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் இறங்கினர். பின்னர் ஆசிரியர்கள், கலைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்தனர். சாலை முற்றுகைகள், 16 நாட்கள் தொடர் நடைபயணங்கள், டிக்டாக் மற்றும் யூடியூப் பிரசாரங்கள் மூலம் போராட்டம் தேசிய இயக்கமாக வளர்ந்தது. “செர்பியாவா அல்லது மாஃபியாவா?” என்ற முழக்கமும் பரவியது. ‘தலைவரற்ற இயக்கம்’, ‘நிபுணர்கள் ஆட்சி’ என்ற உத்தியை மாணவர்கள் பின்பற்றினர். இதனால் போராட்டத் தலைவர்களை கைது செய்து இயக்கத்தை முடக்குவது அரசுக்கு கடினமானதாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் தீவிரமடைந்த போராட்டத்தை சமாளிக்க முடியாமல் வுசிச் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ராஜினாமா செய்து, அவசரமாகத் தேர்தலை அறிவித்தார். மாணவர்கள் வழக்கமான அரசியல் கட்சியாக மாறாமல், ‘Students’ List’ என்ற மக்கள் கூட்டணி பெயரில் தேர்தலை எதிர்கொண்டனர். முனைவர் பட்டதாரிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், நடிகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட 250 வல்லுநர்களை வேட்பாளர்களாக நிறுத்தினர். ஊடகச் சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு, நிர்வாகச் சீர்திருத்தம், கல்விச் சீரமைப்பு ஆகியவற்றை முன்வைத்தனர். 2026 அக்டோபர் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. மாணவர் கூட்டணி 53.3 சதவீத வாக்குகளுடன் 141 இடங்களைப் பெற்று பெரும்பான்மை வென்றது.














