Home மாவட்டங்கள் சென்னை கலையரசனை விசாரணைக்கு அழைத்துச் சென்றதற்கு கண்டனம்

கலையரசனை விசாரணைக்கு அழைத்துச் சென்றதற்கு கண்டனம்

சென்னை, அக். 29-
பொருளாதார வல்லுநரும், சென்னை வளர்ச்சி மையம் (MIDS) பேராசிரியருமான கலையரசனை நேற்று அதிகாலை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதற்கு இடதுசாரி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து கருத்து தெரிவித்ததற்காக அவரை துன்புறுத்துவதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகப் பொருளாதார நிலவரம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் கலையரசன், அண்மையில் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து கவலை தெரிவித்திருந்தார். தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அதிகமாக இருப்பதாகவும், இதைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னை அடையாறில் உள்ள கலையரசனின் வீட்டுக்கு சாதாரண உடையில் 3 போலீசார் சென்றுள்ளனர். கதவைத் திறந்த அவரிடம் பெயரைக் கேட்ட போலீசார், அவரது செல்போனைப் பெற்றுக்கொண்டு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்துச் சென்றனர். எந்த வழக்கு அல்லது புகார் தொடர்பாக அழைத்துச் செல்கிறார்கள் என்ற விவரத்தை முதலில் அவர்கள் தெரிவிக்கவில்லை. பின்னர், பல்லாவரம் தொகுதி தவெக எம்எல்ஏ காமாட்சியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தகாத வார்த்தைகளில் கருத்து பதிவிட்டதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும், அந்தக் கருத்தைத் தான் பதிவிடவில்லை என்றும் கலையரசன் மறுத்துள்ளார். நீண்ட நேரத்துக்குப் பிறகு அவரை மீண்டும் அடையாறில் உள்ள வீட்டுக்கே போலீசார் அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.