Home பக்தி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்

கோவில்பட்டி, நவ. 2-
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, “ஓம் சக்தி பராசக்தி” என கோஷமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். இத்திருவிழாவுக்கான கால் நாட்டு விழா கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 25-ம் தேதி அதிகாலை அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. அதன்பின்னர் தினமும் பல்வேறு மண்டகப்படிக்காரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரங்களிலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தேரோட்டத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு மேல் உற்சவர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் தேரை இழுத்துச் சென்றனர். நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்த தேர், பின்னர் நிலையை அடைந்தது. விழாவின் 11-ம் நாளான 4-ம் தேதி பகல் 1 மணிக்கு அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். அன்றிரவு 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. 12-ம் நாளான 5-ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) ந.காந்திமதி, திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மண்டகப்படிக்காரர்கள் செய்து வருகின்றனர்.