
விழுப்புரம்: நவ.4-
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் சௌரிராஜன் தலைமை தாங்கினார்.
மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில், அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மருந்து, மாத்திரைகள், பால் பவுடர் உள்ளிட்ட நூறு வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் நடைபெறும் கொலைகள், வன்கொடுமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பொதுமக்களும் முன்வர வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்களும் மாணவர்களும் பாதுகாப்பு அரணாகச் செயல்பட வேண்டும் என்றும், இதற்கான விழிப்புணர்வு இயக்கங்களை அரசு உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் மக்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அரசு மதிப்பளிக்க வேண்டும்; மக்கள் வாழும் பகுதிகளில் திட்டங்களைத் திணிக்கக் கூடாது என்றார்.















